மும்பையில் வேகமாக பரவும் தட்டம்மை

கடந்த 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகளில் ஒட்டுமொத்த உலகையும் கொரோனா வைரஸ் வாட்டி வதைத்து வந்தது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பல்லாயிரகணக்கான உயிர்கள் கொரோனாவுக்கு பலியாகின. பொது முடக்கம், தடுப்பூசி என தொடர் நடவடிக்கைகள் மூலம் உலக அளவில் தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அப்பாடா… கொரோனா அலை ஒரு வழியாக ஓய்ந்தது என உலக மக்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில்பரவிய குரங்கு அம்மை அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

குரங்கு அம்மையின் தொடர்ச்சியாக இந்திய மக்களின் தூக்கத்தை கெடுக்கும் விதத்தில், குறிப்பாக மகாராஷ்டிர மாநில மக்களின் தூக்கத்தை கெடுக்கும் விதமாக தட்டம்மை எனும் வைரஸ் நோய் அம்மாநிலத்தில் தீவிரமாக பரவி வருகிறது.

மும்பை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசித்துவந்த எட்டும் பேரும், புறநகர் பகுதியான பிவாண்டியில் ஒருவரும் என ஒன்பது பேர் அண்மையில் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்களின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து மும்பை மாநகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போதுதான் அவர்கள் தட்டம்மையால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.


இதனையடுத்து இந்த நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் மும்பை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. இருப்பினும் தட்டம்மை அறிகுறிகளுடன் மும்பை மாநகரின் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,200க்கும் மேற்பட்டோர் தற்போது தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் 150க்கும் அதிகமானோர் தட்டம்மை உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரியவர்களை ஒப்பிடும்போது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே தட்டம்மை அதிகம் தாக்கி வருகிறது என்பதால், அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், மத்திய சுகாதாரத் துறையின் உயர்நிலைக் குழு நோய் தாக்கம் குறித்து மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளதாகவும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சல், இருமல் என்ற அறிகுறிகளுடன் ஆரம்பிக்கும் இந்நோயை கண்டுகொள்ளாமல் விட்டால் உடல் சொறி உருவாகி உயிருக்கே உலை வைத்துவிடும் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள், தட்டம்மை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டது என்பதால் பொதுமக்கள் உரிய தற்காப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.


இதனிடையே, மாநிலத்தில் வேகமாக பரவிவரும் தட்டம்மை நோயை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சுகாதாரத் துறை உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

அண்டை மாநிலமான குஜராத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் தட்டம்மை பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp