கோயம்பேட்டில் லுலு மார்க்கெட் வரப்போகுதா? அமைச்சர் கொடுத்த விளக்கம்!

Lulu market koyambedu | கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டதை தொடர்ந்து அந்த இடத்தில் லுலு மார்க்கெட் வரப்போவதாக தகவல் பரவி வருகிறது.

சென்னை கோயம்பேடு லுலு மார்க்கெட் வருவதற்காக தாரை வார்க்கப்பட்டதாக கூறப்படும் செய்திக்கு அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்துள்ளார்.

உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ள லுலு மால், இந்தியாவில் பல கிளைகளை வைத்துள்ளது. இந்த நிலையில், லுலு மால், தமிழகத்தில் கிளையை திறக்க உள்ளதாக கூறப்படுகிறது. பல சந்தைகள், கடைகள், தியேட்டர்களை அடக்கியதுதான் லுலு மால். இதன் தலைமையகம், அபுதாபியில் உள்ளது. இதனை, 2000ஆம் ஆண்டு எம்.ஏ.யூசுஃப் என்பவர் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சூப்பர் மார்கெட்டாக இருந்த இது, பின்னாளில் பெரிய மாலாக உருவானது.

இந்த மால், 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்களது முதல் கிளையை கேரளாவில் தொடங்கியது. கடந்த 2022ஆம் ஆண்டு, இந்த மாலின் தமிழ்நாட்டின் முதல் கிளை, கோயம்பத்தூரில் தொடங்கப்பட்டது. பெங்களூரு, சென்னை, புவனேஷ்வர், ஐதராபாத், லக்னோ, காலிகட், திருவேண்ட்ரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த மால் இன்னும் சில கிளைகளையும் தொடங்க உள்ளது.

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து முனைய இடத்தை லுலு மாலுக்கு தாரை வார்க்க போவதாக கூறப்படும் தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்த புறநகர் பேருந்து நிலையத்தை போக்குவரத்து நெரிசலால் கிளாம்பாக்கத்துக்கு தமிழ்நாடு அரசு இடம் மாற்றியது. இந்நிலையில் கோயம்பேடு இடத்தை லுலு மால் என்று குறிப்பிடாமல் அபுதாபியை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்க்க போவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, அன்புமணியின் புகார் சிறந்த நகைச்சுவை என்று விமர்சித்துள்ளார். புறநகர் பேருந்து முனையம் இருந்த கோயம்பேடு இடத்தில் மக்களின் கருத்து கேட்டறிந்து மக்களுக்கான திட்டம் கொண்டு வரப்படும் என்றும் சேகர்பாபு கூறினார். இதனிடையே தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், கோயம்பேட்டில் புறநகர் பேருந்து முனையம் இருந்த இடத்தை லுலு மால் அமைக்க அரசு தரப்போவதாக கூறப்படும் தகவல் முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp